Welcome to Dr.Kalam's Website
  Important announcement
      Home    
 Today : Sunday Nov 23 2014 9:48AM
News Documents Video Web
 



Photos on this Article
Videos on this Article
Podcast on this Article
Feedback
You are viewing page of :  abdulkalam.com    Speeches / Lectures Back
Speeches / Lectures

அனைத்து இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டு உரை
புது டெல்லி, Sep 15 2012
Updated on Sep 15 2012
Published bywww.abdulkalam.com
Rate this Post  |  Read Comment(5)  |  Post Comment  |    E-Mail This | Print     
               Bookmark and ShareSubscribe
 

தமிழ் சான்றோர்கள் கூடி நல்ல அறிவார்ந்த சமுதாயத்தை மலரச்செய்ய வேண்டும்

மகிழ்ச்சியான குடும்பம் சமுதாயத்தின் அஸ்திவாரம்

அன்பு நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு தில்லித் தமிழ் சங்கத்தில் வைத்து நடைபெறும் அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு - 2012ல் கலந்து கொள்வது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த மாநாட்டிற்கு அனைத்து தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகளும், கவிஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் வந்து கலந்து கொண்டிருக்கிறீர்கள், தில்லி தமிழ் சங்கமும், தினமணி பத்திரிக்கையும் இணைந்து நடத்தும் இந்த மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன். நல்ல எண்ணங்களையும், செயல்களையும் உருவாக்கிய பெருமை உங்கள் எல்லோருக்கும் உண்டாக வாழ்த்துகிறேன்.

இன்றைக்கும் நடக்கும் விழா ஒரு புதுமையான விழா. அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ் சங்கங்களும் அதன் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் விழா என்பதால் இந்த விழா சிறப்பு பெறுகிறது. தமிழுக்கும், தமிழர்தம் சமுதாய நல்வாழ்வுக்கும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன என்ற கடமையை பற்றி விவாதிக்க இருக்கிறீர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

இங்கு கூடியிருக்கும் தமிழ் கவிஞர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், இளைஞர்கள், குடும்பங்கள், உங்கள் அனைவரையும் பார்க்கும் பொது, எனக்கு ஒர் எண்ணம. என்னால் எதைக்கொடுக்க முடியும் என்ற நினைவு எனக்குள் வருகிறது. இந்த 20 நிமிடக்களில் உங்களிடம் கலந்துரையாடும் போது, இரண்டு கருத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ஒரு கருத்து, தமிழர்கள் வாழ்ந்த வாழ்வு மிகச் சிறப்பான போற்றுதலுக்குறிய வாழ்வு. வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வு பல விதமான நல்ல அறிவு சார்ந்த சாதனைகளை படைக்கும் திறன் பெற்ற வாழ்வு, அதே சமயத்தில் பல சோதனைகளை எதிர் கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருக்கிறது. நமது இந்திய நாடு வளர்ந்த நாடாக மாற, நல்லொழுக்கம் உள்ள மக்களைக் கொண்ட நாடாக மாற, உங்களிடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாம் செய்யும் எந்த பணி, தமிழகத்தை, இந்த நாட்டை அறிவார்ந்த நல்ல மக்களுடைய நாடாக மாற்ற விதை விதைக்கிறதோ, அந்த பணிதான் நாம் சமுதாயத்திற்கு செய்யும் நற்பணியாகும். எனவே, இன்றைக்கு "தமிழ் சான்றோர்கள் கூடி நல்ல அறிவார்ந்த சமுதாயம் மலரச்செய்ய வேண்டும்" என்ற தலைப்பில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தமிழ் வளர்ச்சி

தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் என்று நாம் எண்ணும் போது, புறநானுறு, சிலப்பதிகாரம், கம்பர், திருவள்ளுவர், பாரதியை பற்றி நினைக்காமல் இருக்கமுடியாது.

கம்ப இராமாயணம் நாட்டுப்படலத்தில் பாலகாண்டத்தில் 40வது பாட்டு இங்கு நினைவுக்கு வருகிறது. அதாவது கம்பரின் கவி உள்ளம் கண்ட காட்சி

ஆலைவாய்க் கரும்பின் தேனும்,
அரி தலைப் பாளைத் தேனும்,
சோலை வீழ் கனியின் தேனும்,
தொடை இழி இறாலின் தேனும்,
மாலைவாய் உகுத்த தேனும்,
வரம்பு இகந்து ஒடி, வங்க
வேலையாய் மடுப்ப - உண்டு,
மீன் எலாம் களிக்கும் மாதோ.

என்று பாடுகிறார். அதாவது கம்பர் சொல்கிறார், கரும்பாலைகளில் இருந்து பெருகும் தேன் போன்ற கருப்பஞ்சாரும், பாளைத் தேன் இறக்குவோர் அரிந்த பாளையிலிருந்து வடியும் பதனீரும் சோலைவீழ்க் கனியின் தேனும் - சோலைகளில் பழுத்த பழங்களின் சாறும், தொடுக்கப்பட்ட இடத்தினின்று வழிகின்ற தேனடைத்தேனும், மலர் மாலைகளிலிருந்து வடியும் தேனும், எல்லை மீறிப் பெருகி ஒடி, கப்பல்கள் இயங்கும் கடலிலே போய் சேர, கடலில் வந்து கலக்கின்ற அமுதத்தை மீன்கள் எல்லாம் பருகிக் களிக்கும் என்று அக்காலத் தமிழகத்தை படம் பிடித்து காட்டுகிறார். இயற்கைக்கு இறக்கையை மக்கள் கொடுத்தால், கம்பர் கண்ட காட்சி இன்றைக்கு உண்மையாகலாம்.

10 செப்டம்பர் 2012 அன்று தினமணியில் இரா. தீத்தாரப்பன், இராஜபாளையத்தில் இருந்து அன்புள்ள ஆசிரியருக்கு என்று நிறைமொழி மாந்தர்... என்ற தலைப்பில் எழுதிய பகுதி எனக்கு பிடித்திருந்தது. அவர் தொல்காப்பியம் கட்டுரையில் தமிழனின் பெருமையை, அறிவை தமிழர்களே ஒதுக்கி விட்டார்களே என்ற ஆதங்கம் தொனிக்கிறது என்று குறிப்பிட்டு விட்டு. அவர் தொல்காப்பியத்தில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறார்.

பொருளதிகாரத்தில் மரபியல் உயிர் பாகுபாடு பகுதியில்.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே...

என்ற சூத்திரத்தில் ஓர் அறிவுள்ள தாவர இனங்களிலிருந்து ஆறு அறிவுள்ள மனித இனம்வரை பாகுபாடுத்திக் காண்பித்ததோடு, தெளிவாக அறிந்த முன்னோர்கள் நெறிப்படுத்தியுள்ளனர் என்று கூறி நம் முன்னோர்களின் பெருமையையும் அறிவையும் சுட்டிக்காட்டுகின்றார். இன்றைய கவிஞர்கள், இலக்கிய சான்றோர்கள் எல்லோரும், தமிழ் இலக்கியத்தை அரும்பெறும் அறிவுக்களஞ்சியமாக உருவாக்கி இன்றைய இளைய சமுதாயத்தை வழிநடத்தும் வகையில் பல அரிய காவியங்களை அவசியம் உருவாக்குவார்கள் என்று நம்புகிறேன். எல்லா தமிழ்சங்களும் இணைந்து அப்பணிகளை செயல்படவேண்டும்.

யாதும் ஊரே, யாவரும் கேளீர்

தமிழர்கள் விவேகத்தோடு, நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைகளை கடைப்பிடித்து, அன்பு, அறிவு, விவேகம், வந்தாரை வாழ்விக்கும் தமிழர்தம் கலாச்சாரம், அயலாரைப்போற்றும் பண்பு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற பரந்த மனப்பான்மை, மன்னித்து மறக்கும் குணம், வேற்றுமையில் ஒற்றுமை போன்ற சாத்வீக வழிமுறைகளை பேணி, தமிழர் இல்லம் தோறும் குழந்தைகள் மனதில் அதை பதிந்து, போரில்லா உலகத்தை படைக்க உலகத்தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டும். எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள்தான். எனக்கு பிடித்த ஓரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைக் கேளுங்கள்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.



அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும் என்பதாகும்.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் சொல்கிறது.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்"



என்று. அதாவது அரசியல் பிழைத்தோரை அறமே எமனாக மாறி அழிக்கும். எனவே இந்த கருத்துக்களை நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தால் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். அப்படிப்பட்ட அறிவார்ந்த சமுதாயம் தான், நமது எதிர்கால சந்ததிகளை ஒரு போரில்லா உலகத்தை நோக்கி அழைத்து செல்லும். இந்த சமயத்தில் கம்பர் தான் என் நினைவுக்கு வருகிறார்.
யுத்தமில்லா வாழ்வு

கம்பராமாயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி, வஷிஷ்ட மாமுனிவர் இராமனுக்கு முடிசூட்டும் விழாவின் முன், அறிவுறுத்திய காவிய அறிவுரை

"யாரொடும் பகை,
கொள்ளலன் என்றபின்,
போர் ஒடுங்கும்,
புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது,
அது தந்தபின்,
வேரோடும் கெடல்,
வேண்டல் உண்டாகுமோ?"

இதன் அர்த்தம் என்னவென்றால் யாருடனும் பகைமை கொள்ளாவிட்டால் போர் இல்லாத நிலை உண்டாகும். போரின்மையால் மன்னனின் புகழ் மங்காது. மன்னனின் ஆட்சியும், மன்னனின் வாழ்வும் குறைபடாது. போரில்லா நிலைமை ஏற்பட்டுவிட்டால், எந்த ஒரு மன்னர் குலத்தையும் அடியோடு அழிய வேண்டுமென்று எவரும் சபித்து கொண்டிருக்க மாட்டார்கள்.

போரில்லாத நாடு உலக அமைதிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கம்பனுடைய கவிதை நம் எல்லோருக்கும் என்ன அருமையாக உணர்த்துகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் யுத்தமில்லாத வாழ்வு உலகுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறார் கம்பர். எனது நண்பர் கவியரசு வைரமுத்து அவர்கள், எனக்கு அவர் சமீபத்தில் எழுதிய மூன்றாம் உலகப் போர் என்ற ஒரு அருமையான புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார். என்ன ஒரு அருமையாக, விஞ்ஞான முறைப்படி விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லி இருக்கிறார். அதாவது விவாசயம் தான் உலகத்தின் முதுகெலும்பு, விவசாயத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தால் மூன்றாம் உலகப்போர் வராது என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் கூறுகிறார். அந்நிலையை நோக்கி நாம் எல்லோரும் முன்னேறுவோமாக.

மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பம் உருவாக்குவோம்

திருவள்ளுவரின் ஒரு குறள் இப்போது என் நினைவுக்கு வருகிறது, அதாவது

மன நலம் மன்னுயிர்க் காக்கம், இன நலம்
எல்லாப் புகழும் தரும்

மன நலம் மண்ணுலகிலுள்ள மாந்தர்க்கெல்லாம் செழிப்பைத் தருவது. இனத்தின் மன நலம் நன்றாக இருக்குமெனில் செயல் வீரனுக்கு அவனுடைய இனத்தினிடமிருந்து எல்லாவிதமான உதவிகளும் கிடைக்குமாதலால் அவன் தன் வாழ்நாளில் தான் செய்யக்கருதும் அத்துணைக் காரியங்களையும் சிறப்பாகச் செய்து முடிப்பான். அதன் காரணமாக பலவிதமான புகழ்களைப் பெறுவான். எனவே நல்ல மனநலம் ஒவ்வொரு தமிழ் குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்றால் தமிழ் சமுதாயம் தலைத்தோங்க, தமிழ் சமுதாயம் வளர்ச்சி பெற்று புகழ் பெறக்கூடிய வெற்றிக்கு அது வழி வகுக்கும்.

எனவே நண்பர்களே, உங்களோடு இன்றைக்கு மற்றோரு கருத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பத்தை உருவாக்குவது எப்படி? உலகமய மாக்கப்பட்ட இன்றைய சூழ்நிலையில் சமுதாய மறு மலர்ச்சிக்கு, வளர்ச்சிக்கு மகிழ்ச்சியான நல்ல குடும்பம் மிகவும் முக்கியம். அதற்கு ஒரு சமன்பாட்டை உருவாக்கியிருக்கிறேன். அதில் நான்கு பண்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது

மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பம் = ஆன்மிகக் குடும்பம் + சந்தோஷம் மிக்க தாய் + வாய்மையான தந்தை + தூய்மையான பசுமை வீடு


இப்படிப்பட்ட மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பம் தான் தமிழ் சமுதாய மேம்பாட்டிற்கு அடிப்படையாகும்.
முதலாவது ஆன்மிகக் குடும்பம்

ஆன்மீக குடும்பம் என்றால் என்ன? நண்பர்களே, நாம் ஒரு சின்ன குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, இரண்டு மகன்கள், ஒரு மகள் அல்லது இரண்டு மகள்கள், ஒரு மகன் என்று எடுத்துக்கொண்டால், இன்றைய சூழ்நிலையில், வாழ்க்கையை நல்ல மேம்பாட்டுடன் நடத்துவதற்கு கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இன்றைக்கு பல குடும்பத்தில் குழந்தைகளோடு பேசி மகிழ்வதற்கு நேரமில்லை. வேலைப் பளு மற்றும் தொலைக்காட்சி நமது பொன்னான நேரத்தை ஆக்கிரமிக்கிறது. எனவே எனக்கு ஒரு கனவு, அந்த கனவுக்குடும்பம் எப்படி இருக்கும் தெரியுமா? முதலில் குழந்தைகள் எவ்வித நல்ல பண்போடு வளரவேண்டுமோ, அவ்வித நல்ல பண்புகளின் இருப்பிடமாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உதாரணமாக தங்களது வாழ்க்கையை முதலில் அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த குடும்பத்தில் ஒரு சிறிய பிராத்தனை அறை இருக்க வேண்டும், குறைந்தது 10 புத்தகங்கள் கொண்ட ஒரு சிறிய நூலகம் இருக்கும். ஒரு வேலையாவது, குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து உணவருந்த வேண்டும். அந்த நேரத்தில் புத்தகத்தில் படித்த நல்ல கதைகளை, சம்பவங்களை, வாழ்க்கைப்பாடத்தை தனது குழந்தைகளுக்கு கதை போல அழகான சம்பவங்களோடு விளக்கி, குழந்தைகள் ரசிக்கும் படி வேடிக்கையாக சொல்லிக்கொடுக்க வேண்டும், பெற்றோர்கள்.

சாப்பிட்ட பின் ஒரு அரை மணி நேரமாவது நூலகத்தில் உள்ள புத்தகத்தைப் படிக்க வேண்டும். பெற்றோர்கள் படிக்கும் வழக்கத்தைப் பார்க்கும் போது பிள்ளைகளுக்கும் படிக்க வேண்டும் என்ற உணர்வு வரும், அவர்களும் தினமும் புத்தகங்களை படிப்பார்கள். சில குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொண்ட கதைகளை, நிகழ்ச்சிகளை பள்ளியில் சென்று மற்ற குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வார்கள். அதன் பலன் அதிகமான குழந்தைகளையும், அவர்கள் மூலமாக அவர்களது குடும்பங்களையும் சென்றடையும். அதுமட்டுமல்ல, குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து தினமும் ஒரு தடவையாவது தங்களது பிராத்தனை இடத்திற்கு சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டின் நூலகம், வீட்டின் பிரார்த்தனை கூடம் சேர்ந்த இரண்டும் ஒரு குடும்பத்தை ஆன்மிக குடும்பமாக மாற்றும்.

இப்படி பல வகைகளில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால், நல்ல கருத்து பரிமாற்றம் நிகழும், அன்பு பிறக்கும், பாசம் வளரும், அறிவுப்பரிமாற்றம் நிகழும், குடும்பத்தில் தெய்வீகம் பிறக்கும், அமைதி பிறக்கும். அப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகள், நம்பிக்கையுடன் உருவாகும், சுயமரியாதையுடன் வாழப்பழகும், தான் செய்யும் அனைத்து செயல்களையும் ஒரு தனித்தன்மையுடன் செய்யவேண்டும் என்ற உணர்வுடன் வளரும், அதை செயல் படுத்தும். எனவே இப்படிப்பட்ட ஆன்மிகக்குடும்பம் முதலில் உருவாக வேண்டும்.

இரண்டாவது சந்தோஷம் மிக்க தாய் - குடும்ப மகிழ்ச்சி

இது நான் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சொல்லும் விஷயம். இந்த கருத்தை நான் சொல்ல சொல்ல மாணவர்களும், இளைஞர்களும் திரும்ப, திரும்ப சொல்வார்களா, அதாவது

இன்று முதல்,

நான் தாயின் முகத்திலும், அகத்திலும் மகிழ்ச்சியை உருவாக்குவேன்.

என் தாய் மகிழ்ச்சியாக இருந்தால், என் வீடு மகிழ்ச்சியாக இருக்கும்
என் வீடு மகிழ்ச்சியாக இருந்தால், இந்த சமுதாயம் மகிழ்ச்சியாக இருக்கும்

இந்த சமுதாயம் மகிழ்ச்சியாக இருந்தால், தமிழ்நாடு மகிழ்ச்சியாக இருக்கும்

தமிழ்நாடு மகிழ்ச்சியாக இருந்தால், இந்தியா சந்தோஷமடையும்.

எனவே நண்பர்களை எத்தனை பேர் உங்கள் தாயை சந்தோஷப்படுத்துவீர்கள். என்ன செய்வீர்களா?

மூன்றாவது வாய்மையான தந்தை

நண்பர்களே, தந்தை என்றால் முதலில் அறிவை ஊட்டும் ஆசான் என்பவர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. தந்தைதான் அறிவையும், ஆற்றலையும், தைரியத்தையும் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும். தந்தைதான் குழந்தைகளுக்கு முதல் ஹீரோ, குழந்தை வளரும் போது தந்தையைப் பார்த்து தான் வளர்கிறது. தந்தை தான் வாய்மையாக நடந்து காண்பிக்க வேண்டும், நேர்மையாக வாழ்ந்து காண்பிக்க வேண்டும், விவேகத்தை ஊட்டி வளர்க்க வேண்டும், வாழ்க்கையை தூய்மையாக வாழ்ந்து காண்பிக்க வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, பெற்ற குழந்தைகளுக்கு ஒர் எடுத்துக்காட்டாக வாழவேண்டும். அப்படிப்பட்ட வாய்மையான தந்தை தான் இன்றைய சூழ்நிலையில், இளைய சமுதாயத்தை பண்படுத்த முடியும். திருவள்ளுவர் சொல்கிறார்.

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி, அவையத்து
முந்தி இருப்பச் செயல்


தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை, அவனைக் கற்றவர் கூட்டத்தில் முதலிடத்தில் இருக்கும் படி கல்வியறிவுள்ளவனாக்குதல் என்பதாகும். எனவே மூன்றாவதாக வாய்மையான தந்தைதான் மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பத்தை உருவாக்குவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறார்.

நான்காவது தூய்மையான பசுமை வீடு

நண்பர்களே, இன்றைக்கு பூமியின் தட்ப வெப்பநிலை தொடர்ந்து மாறி வருகிறது. மரங்களை வெட்டுவதும், தொழிற்சாலைகளில் மற்றும் போக்குவரத்து வாகனங்களில் இருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற கரியமில வாயுவின் காரணமாக ஒசோன் படலத்தில் ஒட்டை விழுந்து பூமியின் தட்ப வெப்ப நிலை அதிகரிக்கின்ற காரணத்தால், இன்றைக்கு மழை பொய்த்து வறட்சி, வெள்ளம் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது.

குறிப்பாக இளைஞர்கள் நினைத்தால் அனைவரும் இந்த சூழ்நிலையை மாற்ற முடியும். இந்திய மக்கள் அனைவரும், ஒவ்வொருவரும் ஒரு மரம் நட வேண்டும் என்ற உறுதி மொழி எடுக்க வேண்டும். ஓரு மரம் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்ஸைடை ஓரு வருடத்திற்கு உள் வாங்கி அழிக்கிறது. 14 கிலோ கிராம் எடையுள்ள ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அப்படி என்றால், நாம் ஓவ்வொருவரும் நம் வாழ் நாளில் 10 மரங்கள் நட்டு அதைப்பாதுகாத்தால், 10 பில்லியன் மரங்களை நாம் நடுவோம் என்ற இலக்கை இலகுவாக அடைய முடியும். அப்படி 10 பில்லியன் மரங்களை நாம் நட்டால் இந்தியாவில் மாறிவரும் தட்ப வெட்ப சூழலை சமாளித்து, நமது எதிர்கால வாழ்க்கையை வழுப்படுத்த இயலும்.

எனவே நண்பர்களை, ஒவ்வொரு வரும் மரம் நட்டு நாட்டில் பசுமையை உருவாக்க, உங்கள் வீடு பசுமையான வீடாக இருக்க வேண்டும். பசுமையான வீடு என்றால், மரம் மட்டும் வளர்பது அல்ல, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், உங்கள் வீட்டில் இருந்து தெருவில் எவ்வித குப்பையும் போட மாட்டோம், வீட்டை மட்டுமல்ல, தெருவையும் சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நண்பர்களே, இது வரை ஒரு மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பம் உருவாக நான்கு பரிணாமங்களைப் பார்த்தோம். அதாவது

மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பம் = ஆன்மிகக் குடும்பம் + சந்தோஷம் மிக்க தாய் + வாய்மையான தந்தை + தூய்மையான பசுமை வீடு

இந்த நான்கு நல்ல கருத்துக்களை ஒவ்வொரு குடும்பமும், தங்களது இல்லங்களிலே வழக்கத்திற்கு கொண்டு வந்தீர்கள் என்றால், இளைய சமுதாயம், ஒரு நல்ல அறிவார்ந்த சமுதாயமாக மாறும், அந்த அறிவார்ந்த இளைய சமுதாயம், சாதனை படைக்கும், வரலாறு படைக்கும், தமிழை, தமிழர் தம் வாழ்வை பார்போற்ற வைக்கும். எனவே. நண்பர்களே, உறக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. உறக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. எனவே அகில இந்தியாவில் இருந்து வந்திருக்கும் தமிழ் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் அனைவர்களும், மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பம் நாட்டில் வளரும் பணியை செய்வீர்களா.

முடிவுரை

நண்பர்களே,

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்


என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார். அதாவது, சரியான இடத்தை தேர்ந்தெடுத்து காலம் கனியக் காத்திருந்து அது கனிந்தவுடன் முயற்சியை ஏற்படுத்த முடியுமெனின் உலகமே தமக்குச் சொந்தமாக வேண்டினும் நடந்தேறும். எனவே நண்பர்களே, நமது எண்ணம், செயல் அனைத்தும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில் தான் அமைந்திருக்க வேண்டும். எனவே தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தால், இந்தியா 2020க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது நிச்சயம். நம் இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால் அவசியம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும், இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.

ஒரு நேர்மையான அரசியல், அனைத்து மக்களையும், அவர்தம் கலாச்சாரத்தையும் போற்றும், நேர்மையான, சமுக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றும் ஒர் அரசியல் தலைமை இளைஞர் மத்தியில் இருந்து உருவாகும் அதற்கு தமிழ் சமுதாயம் உறுதுணையாக இருக்கும்.

எனவே நண்பர்களே, இரண்டு நாட்களுக்கு நடைபெறும் அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு ? 2012 தமிழ் சான்றோர்கள் கூடி நல்ல அறிவார்ந்த சமுதாயத்தை மலரச்செய்ய வேண்டும் என்று எண்ணத்துடன் விவாதித்து, அதை செயல் படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

இறைவன் அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.


By, Dr. APJ Abdulkalam
www.abdulkalam.com

User Rating : Rate this Post   
Overall Rating of this Article:      
Post Comment
User Comments :
5   MuthumaniPosted OnSep 25 2012 13:50:57
sammuthu2006@gmail.com
Kalam's intelligent personality and inspiring speech always attracts me. His speech to Tamil society will guide our future generation.


4   MuthumaniPosted OnSep 25 2012 13:50:26
sammuthu2006@gmail.com
Kalam's intelligent personality and inspiring speech always attracts me. His speech to Tamil society will guide our future generation.


3   A MahalingamPosted OnSep 16 2012 09:36:40
sn.mahali@gmail.com
Dear & Respected Sir, Thank you very much for the excellent talk about tamil and definition of Good and happy family - A Mahalingam, Chennai


2   JaisriPosted OnSep 15 2012 16:29:50
Jaisri.archana@gmail.com
Nice speech by dr kalam sir


1   sankaranarayananPosted OnSep 15 2012 15:05:29
kksankar@rediffmail.com
Dear Kalamji Padikka Akni sirakukalum, Nattukku agni yuvukanaiyum thantha Kalam avarkalai vazthukiren Thanks & Regards K.K.Sankaranarayanan




Back Top
Welcome to www.abdulkalam.com
Tirukkural  |  Dr.Kalam's Page  |  Vision 2020 Missions  |  Inspiration  |  Thoughts  |  To Youth  |  e-Paper  |  Speeches / Lectures  |  Looking Beyond  |  Interaction   |  News and events  |  My Presidential Address  |   Admin Login  |   Feedback  |   Contact us
© 2001 - 2014 www.abdulkalam.com.All Rights Reserved.